பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, March 23, 2016

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, 

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற அரசாணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. 

பாரபட்சம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவுசெய்வதற்கு முன்பு தமிழக அரசின் ஒப்புதலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெறவேண்டும் என்று கடந்த 1988 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைகள், சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகவும், அரசு ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். 

புதிய அரசாணை 

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை மேற்கொள்ள வகுத்தளிக்கப்பட்டிருந்த வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்தும் உடனே ரத்து செய்யப்படுகின்றன. அந்தஸ்து அல்லது குரூப் போன்றவற்றை தவிர்த்து எந்த நிலை அரசு அலுவலராக இருந்தாலும், அவர்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அந்த புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பின்னரே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தவேண்டும் என்ற புதிய அரசாணை கடந்த பிப்ரவரி 2-ந் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. 

சட்டவிரோதமானது

இந்த புதிய அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஒப்புதல் பெற்ற பின்னரே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற அரசாணை சட்டவிரோதமானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. பிப்ரவரி 2-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். 

தடை மறுப்பு 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும். விசாரணையை வருகிற ஜூன் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment