பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, March 22, 2014

`முதுக்குளத்தூர் உ.தொ.க.அலுவலர் திரு ஐ.சூசைதாஸ் அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம். மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

            



           தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலருமான திரு.ஐ.சூசைதாஸ் அவர்கள் 20-03-2013 அன்று மதுரையில் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து அகால மரணம் அடைந்துள்ளார்கள். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  அன்னாரின் சொந்த ஊரான  சவுரியாபட்டினத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொருளாளர் திரு.மாதவராஜன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அன்னாரின் உடலுக்கு மாநில அமைப்பின் சார்பில் மாநில தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் அவர்கள்  அஞ்சலி செலுத்தி உடலை உறவினரிடம் ஒப்படைத்தார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday, March 10, 2014

26-02-2014 & 06-03-2014 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்தற்கான சான்று - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளமைக்கான சான்று வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

Saturday, March 8, 2014

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி !

அரசு கருவூலத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயில், 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், முன்னதாகவே, மத்திய அரசு, கடந்த1ம் தேதி, அதன் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது; ஆனால், தமிழக அரசு, இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கடந்த ஆண்டு, 35 லட்சம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 600 கோடி ரூபாயும், கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு, 320 கோடி ரூபாயும் வழங்காமல், நிலுவை உள்ளது. இதேபோல், பல திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தான், 'மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த பின்பும், தமிழக அரசு, அறிவிக்கவில்லை' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசு, கருவூலத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வரும் மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கஜானாவில், நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அகவிலைப்படி உயர்வை அறிவித்தால், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவில், தமிழக அரசு நிதி திரட்ட வேண்டும். அதற்கு, என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை' என்றார்.

- நமது நிருபர் - நன்றி. தினமலர்.

Saturday, March 1, 2014

அரசு ஊழியர் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில் பிரச்னை : ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு

          சென்னை: அரசு ஊழியர்களில், 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான சம்பளம் குறித்து, பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, ஒரு குழுவை, தமிழக அரசு நியமித்தது. இக்குழு, 2009ல், பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பள விகிதத்தில், அரசு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தியை நீக்க, 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான, சம்பளத்தை குறைத்து, 2011ல், அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை
     தள்ளுபடி செய்த, உயர் நீதிமன்றம், "சம்பள விகிதத்தை மாற்றியமைக்கவும், தவறுதலாக நிர்ணயித்ததை திரும்பப் பெறவும், அரசுக்கு உரிமை உள்ளது' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், "அப்பீல்' மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் என்.பால்
வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சம்பள விகிதம் தவறாக நிர்ணயிக்கப்பட்டதா, சரியாக நிர்ணயிக்கப்பட்டதா என்பதை, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பி தான், முடிவு செய்ய வேண்டும். சம்பள விகிதத்தை குறைப்பதற்கு முன், இயற்கை நியதி பின்பற்றப்படவில்லை. எனவே, அனைவருக்கும் சந்தர்ப்பம் அளித்து, இந்தப் பிரச்னையை, புதிதாக, அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம். எனவே, சம்பள குறைபாட்டுக்கு தீர்வு காணும் குழுவின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, சத்தீஸ்கர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற, நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தி தலைமையில், குழுவை, அரசு அமைக்க வேண்டும். குழுவில் உறுப்பினர்களாக, முதன்மை செயலர் அந்தஸ்தில், ஒன்று அல்லது இரண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அரசு நியமித்துக் கொள்ளலாம். இக்குழுவானது, 20 மற்றும் அதற்கு மேற்பட்ட துறைகளில் பணியாற்றும், 52 பிரிவுகளின் ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு அல்லது குறைப்பு பற்றி அரசு முடிவெடுக்க, பரிந்துரைகளை அளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்குள் குழுவை அமைத்து, பரிந்துரைகளை அளிக்க, கால வரம்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய முடிவெடுக்கும் வரை, 2011 மற்றும் 2013ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.