பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, March 1, 2014

அரசு ஊழியர் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில் பிரச்னை : ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு

          சென்னை: அரசு ஊழியர்களில், 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான சம்பளம் குறித்து, பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, ஒரு குழுவை, தமிழக அரசு நியமித்தது. இக்குழு, 2009ல், பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பள விகிதத்தில், அரசு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தியை நீக்க, 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான, சம்பளத்தை குறைத்து, 2011ல், அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை
     தள்ளுபடி செய்த, உயர் நீதிமன்றம், "சம்பள விகிதத்தை மாற்றியமைக்கவும், தவறுதலாக நிர்ணயித்ததை திரும்பப் பெறவும், அரசுக்கு உரிமை உள்ளது' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், "அப்பீல்' மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் என்.பால்
வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சம்பள விகிதம் தவறாக நிர்ணயிக்கப்பட்டதா, சரியாக நிர்ணயிக்கப்பட்டதா என்பதை, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பி தான், முடிவு செய்ய வேண்டும். சம்பள விகிதத்தை குறைப்பதற்கு முன், இயற்கை நியதி பின்பற்றப்படவில்லை. எனவே, அனைவருக்கும் சந்தர்ப்பம் அளித்து, இந்தப் பிரச்னையை, புதிதாக, அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம். எனவே, சம்பள குறைபாட்டுக்கு தீர்வு காணும் குழுவின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, சத்தீஸ்கர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற, நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தி தலைமையில், குழுவை, அரசு அமைக்க வேண்டும். குழுவில் உறுப்பினர்களாக, முதன்மை செயலர் அந்தஸ்தில், ஒன்று அல்லது இரண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அரசு நியமித்துக் கொள்ளலாம். இக்குழுவானது, 20 மற்றும் அதற்கு மேற்பட்ட துறைகளில் பணியாற்றும், 52 பிரிவுகளின் ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு அல்லது குறைப்பு பற்றி அரசு முடிவெடுக்க, பரிந்துரைகளை அளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்குள் குழுவை அமைத்து, பரிந்துரைகளை அளிக்க, கால வரம்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய முடிவெடுக்கும் வரை, 2011 மற்றும் 2013ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment