பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, September 26, 2014

ஆசிரியர்கள் நியமனத்தில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் 80 இடங்களை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை காதக்குறிச்சி தமிழரசன் தாக்கல் செய்த மனு: பி.எஸ்.சி., -பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 92 மதிப்பெண் பெற்றேன். இதனால், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றேன். 2014 மே 30 ல் தமிழக அரசு, 'பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்பிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,' என உத்தரவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை வேறு; அதிக மதிப்பெண் பெறுவது கடினம். அரசு உத்தரவில் பணிமூப்பு, அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவில்லை. எனக்கு 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது.
தகுதித் தேர்வில் 92 மதிப்பெண் வாங்கினாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் 59.08 ஆக குறைந்து விட்டது. இதனால், ஆசிரியர் பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. தகுதித் தேர்வு அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.இதுபோல மேலும் பலர் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிராக மனுக்கள் செய்தனர்.தனிநீதிபதி இடைக்கால உத்தரவில், "கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
தனி நீதிபதியின் உத்தரவு அடிப்படையில், 14 மனுக்கள் மீது மட்டும் நேற்று முன்தினம் அரசுத்தரப்பில், ' வெயிட்டேஜ் மதிப்பெண் சரியான நடைமுறைதான். இதற்கு எதிரான மனுக்களை சென்னை ஐகோர்ட் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது,' என்றார்.
நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று பிரதான மற்றும் நிலுவையில் உள்ள பிற மனுக்களை விசாரித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," மனுதாரர்களின் நலன் கருதி, நியமனத்தில் 80 இடங்கள் காலியாக வைக்கப்படும். நியமன நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: அரசுத் தரப்பு தெரிவித்தபடி 80 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவுப்படி, நியமன நடைமுறைகளை தொடர டி.ஆர்.பி., விரும்புகிறது. மனுதாரர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நியமன நடைமுறையில் தலையிட விரும்பவில்லை. நியமன நடைமுறை தொடரலாம். விசாரணை அக்.,7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

சென்னை :புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளனர்.

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

Tuesday, September 16, 2014

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து

மதுரை :"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில்,
குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Thursday, September 4, 2014

ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்.

                 சு.பாலகிருஷ்ணன்              சி.பாஸ்கரன்                 ப.மாதவராஜன்          இரா.தமிழ்ச்செல்வன்
                  மாநிலத் தலைவர்       பொதுச்செயலாளர்            பொருளாளர்               இணைச்செயலாளர்