பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, August 30, 2016

28-08-2016 அன்று திருச்சி புனித அன்னாள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.



தீர்மானம்: 1
தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாததனால் நான்கு மாதம் மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளதால், மாநில இணைச்செயலாளர் திருச்சி மாவட்டம் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 2
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. .நமச்சிவம் அவர்கள் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக நியமிப்பது என  தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 3
நீலகிரி. திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலச்செயலாளராக  திருப்பூர் மாவட்டம் மழைலையர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு..அழகர்சாமி அவர்களை நியமிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 4
          தமிழகத்தில் உள்ள 413 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள கனிணி தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் முதலிய காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 5
          மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் விலையில்லா பாடபுத்தகம் இரண்டு மட்டும் கல்வி மாவட்ட அளவில்               “Nodal Point”ல் இறக்கப்பட்டு அங்கிருந்து ஒன்றியங்களுக்கு எடுத்து செல்கிறோம். இதற்காக அரசு ஆண்டு தோறும் ரூபாய் 1,50,00,000/= (ரூபாய் ஒரு கோடியே ஜம்பது லட்சம்) லாரி வாடகையாக வழங்கப்படுகிறது. இந்த செலவினத்தை குறைக்கவும், பாட புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் இரண்டையும் மற்ற விலையில்லா பொருட்களை இறக்குவது போல ஒன்றிய தலைநகரில் இறக்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்வது எனவும், நல திட்ட உதவிகளை கண்காணிக்கவும், கையாளவும் தனியாக ஒரு அலுவலரை ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 6
          தமிழகம் முழுவதும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பல அலுவலகங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மத்திய சமையல் கூட கட்டிடமாகும். (புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆஸ்பிஸ்டால் ஷீட் கூரை வேயப்பட்ட மத்திய சமையல் கூடம் மூடப்பட்டு அந்த கட்டிடத்தில் அலுவலகம் இயங்குகிறது)
          இக்கட்டிடங்கள் பொதுப்பணித் துறை மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மராமத்துப்பணி செய்யப்பட்டது. தற்போது அனைத்து அலுவலகங்களும் மிகவும் சிதலமடைந்து உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் பணியில் உள்ள, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனவே அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களும் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 6
          அனைத்து உயர் அலுவலகங்களிலிருந்து தகவல் பெறுதல் மீள தகவல் அனுப்புதல், புள்ளிவிவரம் கோருதல், மற்றும் நலதிட்ட உதவிகளுக்கு தேவைப்பட்டியல் அனுப்புதல் முதலிய பணிகளுடன் தற்போது ஆசிரியர்களின் ஊதியம் ‘e’ Pay Bill முறையில் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளது. வலைதள வசதியே இல்லாமல் இவ்வளவு பணிகளும் வலைதளத்தில் செய்ய வேண்டி உள்ளதால் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பிரதி மாதம் ரூ.3000/=வரை கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. சில அலுவலகங்களில் இதன் பெயரால் தவறுகள் நடை பெறுகிறது. எனவே உடனே அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் வலைதள வசதி (Internet) செய்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 7
          தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அறிவியல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் இல்லை. சில மாவட்டங்களில் மழலையர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் இல்லை. மாறாக சில மாவட்டங்களில் 2 அறிவியல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம், சில மாவட்டங்களில் 2 மழலையர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடமும் உள்ளன. இதை சமன்படுத்தி அனைத்து மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு அறிவியல் / ஒரு மழலையர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் உள்ளவாறு சமன் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 8
          60 பள்ளிகளுக்கு மேல் உள்ள பல ஒன்றியங்களில் ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். எனவே 60க்கும் மேல் பள்ளிகள் உள்ள ஒன்றியங்களுக்கு கூடுதலாக ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை புதியதாக ஏற்படுத்தித்தர கோருவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 9
          32 மாவட்டங்களிலும் அறிவியல் ஊர்தி உள்ளன. பெயரளவில் உள்ள ஊர்திகளை தகுதியற்றதாக்கி புதிய ஊர்தியை வழங்க வேண்டுமாயும், ஓட்டுநர் இல்லாத மாவட்டங்களில் ஓட்டுநர் நியமித்து தரவும் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 10
          நேரடி நியமன உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்ந்து அரசு கோரியுள்ள நேரடி கடிதத்திற்கு (D.O.Letter) உரிய பரிந்துரை செய்திடவும் அரசாணை எண்.95 மற்றும் அரசாணை எண்.1026ல் உள்ளவாறும் பரிசீலிக்க வேண்டுமாய் தொடக்கக் கல்வி இயக்குநரை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 11
          தமிழகத்தில் உள்ள 413 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் சுமார் 56 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மட்டும் கண்காணிப்பாளர் பணியிடம் இல்லை. (அரசாணை எண்.111 பள்ளிக்கல்வித் துறையின் படி) அலுவலகப் பணிகளை மேற்பார்வையிட உடனே கண்காணிப்பாளர் பணியிடம் இல்லாத உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்தித்தர வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 12
          உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆண்டாய்வு தணிக்கை மேற்கொள்ளும் போது ஊதிய நிர்ணயம், ஊக்க ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை முதலிய பணப்பலன்களை சார்ந்து தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அலுவலக தலைவர் என்ற முறையில் அலுவலக ஆணையில் கையொப்பமிடும் அலுவலர் மீது உரிய துறை நடவடிக்கை எடுப்பதை சங்கம் வரவேற்கிறது.
          அதே சமயம் அரசாணை எண்.111ன் படி அலுவலக ஆவண தயாரிக்கும் எழுத்தர், மேலாய்வு செய்து சுருக்கொப்பம் இடும் கண்காணிப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியங்களில்  நடந்துள்ள தவறுகளுக்கு உதவி தொடக்கக்  கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள இயக்குநர் அவர்கள் இதுநாள் வரை கண்காணிப்பாளர் மற்றும் பிரிவு எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் இதை வலியுறுத்தி அளித்துள்ள கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 13
          ஆசிரியர் பணி அறப்பணிஎன்பதற்கிணங்க உண்மையான நேர்மையான கடமை தவறாத ஆசிரியர்களை நாங்கள் மதிக்கிறோம், வணங்குகிறோம், போற்றுகிறோம். அதே சமயத்தில் கடமையை சரியாக செய்யாமலும், குற்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதது மட்டும் அல்லாமல் உரிய நபரிடம் புகாரின் நகலை வழங்கும் சிலர் உள்ளனர். இந்த நடைமுறையை சங்கம் வருத்தத்துடன் இயக்குநர் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், உடனடியாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் மீது நிலுவையில் உள்ள புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழி காட்டுதல் வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 14
          ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அவர் மேற்பார்வையில் சுமார் 30-60 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை மேற்பார்வை செய்யவும், ஆய்வு  நடத்தவும், ஓய்வு ஊதியர் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர், முன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்  ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்ளவும் ஏதுவாக அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் ஈப்பு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 15
பல மாவட்டங்களில் 2008-2009 முதல் இன்றுவரை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பயணப்படியை இந்த நிதியாண்டில் பெற்று வழங்கி TA நிலுவையில்லா ஆண்டாக அறிவிக்க கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 16
          அரசாணை 182ன் படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதில் ஆண்டு தோறும் தவறு நடைபெறுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக பணித்துறப்பு செய்யும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பதில் அடுத்த நபருக்கு வழங்காமல் அரசாணை 182 மற்றும் நீதி மன்ற தீர்ப்பை சரியாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளதை வருத்தத்துடன் பள்ளிக் கல்வி இயக்குனர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 2015-16ல் பணித்துறப்பு செய்த 4 பேர் பணியிடம் இவ்வாண்டு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பின் படி நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்துக் கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.