பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, July 31, 2014

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்; 192 பள்ளிகள் தரம் உயர்வு: 1,682 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் மாண்புமிகு முதல்வர் அறிவிப்பு

 புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் புதிதாக 1,682 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்

செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக்கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

கட்டாய கல்வி
2. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

நிலை உயர்வு
4. நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

நிரந்தர முடக்கம்

5. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

பயிற்சி ஏடுகள்
6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கழிவறைகளை கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத்திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப்பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10–ம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறை பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

5 உண்டு உறைவிடப்பள்ளிகள்
8. தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப்பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக்கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித்திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும்.

கூடுதல் வகுப்பறைகள்

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித்தரப்படும்.

11. 2013–14–ம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.

சிறப்பு பயிற்சிகள்

12. சிறப்பு கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும்.

13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக்கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.

இவ்வாறு மாண்புமிகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Tuesday, July 29, 2014

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகளை தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தெரிவிக்கிறது.

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம்

Saturday, July 26, 2014

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

Friday, July 11, 2014

மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சியான செய்தி வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்வு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகையும் அதிகரிப்பு


மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக இருந்து வந்தது. பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும். இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பலன் அடைவார்கள்.

மூத்த குடிமக்களுக்கு சலுகை
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் உயர்த்தப்படுகிறது. இது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக வெளியான பிற முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடைய தனிநபர்களுக்கான வரி 10 சதவீதமாக நீடிக்கும்.
* ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு வருமான வரி 30 சதவீதமும் விதிக்கப்பட்டு வருவது தொடரும்.
சேமிப்புக்கு சலுகை
* சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது சேமிப்பினை ஊக்குவிக்கும் முடிவாக அமைந்துள்ளது.
* பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.
*வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதுவும் ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
* வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருமான வரி தீர்வு ஆணையம் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 7, 2014

திருச்சியில் 06-07-2014 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.

       உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற வகையில் சிறப்பாக நடத்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
                மேலும் அரசாணை 182ஐ நடைமுறைப்படுத்தி இதுவரை 15 AEEOக்கள் உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு விரைவில் நடத்துவது எனவும், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவியுயர்வு பணியிடமாக அறிவித்து உரிய ஊதியவிகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,  மாவட்ட புத்தக மையத்தில் இருந்து ஒன்றியத்திற்கு பாடபுத்தகம், குறிப்பேடுகள் எடுத்து சென்றுள்ளமைக்கு உரிய போக்குவரத்து செலவினங்களை விரைவில் வழங்கிடவும், பள்ளிகளை பார்வையிடவும், உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவும் சென்று வருகின்ற  AEEOக்களுக்கு பயணப்படி பட்டியல்கள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளதால் அவற்றை உடன் வழங்கிடவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களை பொதுச்செயலாளர் பாஸ்கர் முன்மொழிந்து பேசினார். மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று தீர்மானம் சார்ந்த கருத்துகளையும், மாநில முழுவதும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 75 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.