பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, May 23, 2014

ஏ.இ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல் - தினமணி நாளிதழ் செய்தி


       நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சங்கத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் கூறியது:
      நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுகள் எழுதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி நியமனம் பெறுகின்றனர்.ஆனால், அவர்களுக்கு இந்தப் பணியிடம் மாற்றுப்பணியிடமாகவே கருதப்படுகிறது.
      உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒன்றிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுகிறார். ஆனால், அவருக்கும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படுகிறது.
      நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை மாற்றுப் பணியாகக் கருதுவதற்குப் பதிலாக, பதவி உயர்வு பணியிடமாகக் கருத வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று உடனடியாக இந்தப் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும். உரிய ஆணை வழங்க மேலும் கால தாமதமானால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளோம்.
        அதேபோல், ஒன்றிய அளவில் மாதத்துக்கு 25 பள்ளிகளை ஆய்வு செய்யும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயணப் படி வழங்குவதில் சரியான விதிகள் பின்பற்றப்படுவதில்லை.அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பயணப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார்.

No comments:

Post a Comment