பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, May 28, 2014

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் - மாண்புமிகு முதல்வர் உத்தரவு



சென்னை, மே.28-
ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்திட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் ஜூன் 2-ந்தேதியே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் 2014-15-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்களான விலையில்லா பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, சீருடை ஆகியவை பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ந்தேதி அன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி, சைக்கிள், கிரையான், கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், புத்தகப்பை, காலணி, பேருந்து பயண அட்டை, சாதி, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல், கம்பளி ஆடை (மலைப்பகுதி மாணவர்களுக்கு மட்டும்), சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
முதல்-அமைச்சர் ஆணைப்படி, மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மழை நீர் சேகரிப்பு சார்பாக விழிப்புணர்வு ஊர்வலங்கள் மாவட்டம் தோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஜூன் 2-வது வாரம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ) அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
100 சதவீதம் தேர்ச்சி
2013-14-ம் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. 2014-15-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து மேற்கண்ட தேர்ச்சி சதவீதத்தை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அறிவுரை வழங்க வேண்டும்
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி தரத்தை உயர்த்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், அரசு தேர்வுத் துறை இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment