பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, September 22, 2017

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது-ஐகோர்ட்டு

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களும் பாதிக் கப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து, கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வந்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கடந்த 15-ந்தேதி ஆஜரானார் கள்.
விசாரணை முடிவில், ஜாக்டோ-ஜியோ சங்கங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விசாரிக்க தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிர மணியன், ஜான், மோசஸ் ஆகியோர் ஆஜரானார்கள்.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான குழு தனது அறிக்கையை வருகிற 30-ந்தேதி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று அக்டோபர் 13-ந்தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும்.”

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment