பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, August 2, 2014

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீதான நடவடிக்கை விவர அட்டவணை; அரசு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்யும்படி அட்வகேட் ஜெனரலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வக்கீல் கே.பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மழலையர் பள்ளிகள்

தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகாரம் சட்டத்தின்படி, கல்வி வாரியத்தின் இணைப்பை பெறுவதற்கு முன்பு தனியார் பள்ளிகள் அரசிடம் அங்கீகாரத்தினை பெற்று இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன.
நடவடிக்கை
எனவே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது;-

எதிர்மனுதாரர்களான தனியார் பள்ளிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்களில், பல கோணங்களில் வாதம் செய்தனர்.

அட்டவணை
ஒருசிலர், தங்களது கட்சிக்காரர்கள் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்று செயல்படுவதாகவும், வேறு சிலர் தங்கள் கட்சிக்காரர்கள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகாரச்சட்டத்தின்படி, பகல் நேர குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை நடத்துவதாகவும் வாதிட்டார்கள்.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளின் அங்கீகாரத்தையும் எங்களால் சரி பார்க்க முடியாது. அதே நேரம், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவர அட்டவணையை தாக்கல் செய்வதாக கூறினார்.

எனவே, இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று அந்த அட்டவணையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment