பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, February 16, 2014

ஆசிரியர் தேர்வில் 'வெயிட்டேஜ்' வழங்கும் முறைக்கு எதிர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண்:

சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த, பிரியவதனா என்பவர், தாக்கல் செய்த மனு: நான், பி.ஏ., ஆங்கில இலக்கியத்தில், 64.5 சதவீதம், பி.எட்., படிப்பில், 82 சதவீதம் பெற்றுள்ளேன். எம்.ஏ., ஆங்கில இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில், 104 மதிப்பெண் பெற்றேன். கடந்த மாதம் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்; நியமனத்துக்காக காத்திருக்கிறேன். ஆசிரியர் தேர்வுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்ற, தேர்வு வாரியத்துக்கு, பள்ளி கல்வித் துறை, 2012, அக்டோபரில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2க்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15; ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 என, மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்களில், 'ஸ்லாப்' முறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை மூலம், தகுதி தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தவருக்கும், 104 மதிப்பெண் எடுத்தவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 42 என, வழங்கப்படுகிறது. இப்படி, வெவ்வேறு மதிப்பெண்களை எடுத்தவர்களை, ஒரே, 'குரூப்'பின் கீழ் கொண்டு வருவது சரியல்ல. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆனவர்களுக்கும், குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சியானவர்களுக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பது நியாயமற்றது. ஒவ்வொரு படிப்பிலும், ஒருவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளாரோ, அதன் அடிப்படையிலே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும். போட்டி தேர்வைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும்; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

28ம் தேதிக்கு...:


இதுபோன்று, மேலும், இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், நீதிபதி சுப்பையா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் நமோ நாராயணன் வாதாடினார். மனுக்களுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 28ம் தேதிக்கு, நீதிபதி சுப்பையா தள்ளிவைத்தார்

No comments:

Post a Comment